துக்க நிவாரண அஷ்டகம் (Dhukka Nivarana Ashtakam)

மங்கள ரூபிணி மதியொளி சூலினி
மன்மத பாணியளே
சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும்
சங்கரி சவுந்தரியே
கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல்
கற்பகக் காமினியே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்கநிவாரணி காமாட்சி

கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக்
காத்திட வந்திடுவாள்
தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி
தாங்கியே வீசிடுவாள்
மான்உறு விழியாள் மாதவர் மொழியாள்
மாலைகள் சூடிடுவாள்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி

சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட
சபையினில் வந்தவளே
பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப்
பொருந்திட வந்தவளே
எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே
எழுந்த நல் துர்க்கையளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 
தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட
தண்மதி நீ வருவாய்
கணகண கங்கண கதிர்ஒளி வீசிட
கண்மணி நீ வருவாய்
பணபண பம்பண பறைஒலி கூவிட
பண்மணி நீ வருவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 
பஞ்சமி பைரவி பர்வத புத்திரி
பஞ்சநல் பாணியளே
கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக்
கொடுத்த நல் குமரியளே
சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த
நல் சக்தி எனும் மாயே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 
எண்ணியபடி நீ அருளிட வருவாய்
எம் குலதேவியளே
பண்ணிய செயலின் பலனது நலமாய்ப்
பல்கிட அருளிடுவாய்
கண்ணொளி அதனால் கருணையே காட்டி
கவலைகள் தீர்ப்பவளே
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 
இடர் தருதொல்லை இனிமேல் இல்லை
என்று நீ சொல்லிடுவாய்
சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச்
சுகமது தந்திடுவாய்
படர்தரு இருளில் பரிதியாய் வந்து
பழவினை ஓட்டிடுவாய்
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 
ஜெய ஜெய பாலா சாமுண்டேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய துர்க்கா ஸ்ரீபரமேஸ்வரி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய ஜெயந்தி மங்கள காளி
ஜெய ஜெய ஸ்ரீதேவி
ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி
துக்க நிவாரணி காமாட்சி
 

Popular posts from this blog

பஞ்சபுராணம் (Pancha Puranam)

சகலகலாவல்லி மாலை (Sakalakalavalli Maalai)

தேவார பாடல்கள் (Thavara Padalgal)